Congee of Hope - REMEMBER MULLIVAIKKAL
  • Home
  • Our Stories
  • Media
  • Our Team
  • Contact
  • Home
  • Our Stories
  • Media
  • Our Team
  • Contact

Stories of Hope!

In this section of our site, we bring you stories of Mullivaikkal directly from survivors of Mullivaikkal. Survivors of the #TamilGenocide share their experiences with the world to spread awareness. 

People  sacrificed their lives to save others, to feed others, to protect others. Everyone who was killed, injured or affected in any way are our "HEROES".  We believe that sharing Mullivaikkal Stories means honouring the Heroes.  

மே மாதம் - இது வசந்த காலமாம்...

5/11/2021

0 Comments

 
​மே மாதம் 
இது வசந்த காலமாம்
அழகழகாய் மரங்கள் எல்லாம் பூத்துக்குலுங்குகின்றன
எல்லோருக்கும் 
கண்ணுக்கு குளிர்ச்சியாய்
மனதிற்கு மலர்ச்சியாய்
இருக்கிறதாம் 
ஆனால் எமக்கு மட்டும்.......
எமக்கு மட்டும் இது 
வசந்த கால மாதம் அல்ல 
பூத்துக்குலுங்கிய எம் அழகான வாழ்வை
எம்மிடமிருந்து பறித்து சென்ற மாதம்
 அதிக வேதனைகளையும் ஏக்கங்களையும் தந்து விட்டு சென்ற மாதம்
கண்ணீரையே வாழ்நாள் முழுவதும் பரிசளித்த மாதம்
பெற்றவர்களிடமிருந்து பிள்ளையையும்
பிள்ளையிடமிருந்து பெற்றவர்களையும் 
உயிராய் வாழ்ந்த துணைகளையும் பிரித்து வைத்த மாதம் 
தோழர்களை தோழிகளை உறவுகளை தொலைத்த மாதம்
இந்த மாதம் நெருங்கும் போது
மனம் ஏக்கம் கொள்ளும்...
காலங்கள் வேகமாக கடந்து போவதை உணர வைக்கும்
நம்பிக்கை கிளைகள் ஒவ்வொன்றாக முறிந்து போகும்
அவனின் அவளின் நிலையறிய மனம் துடிக்கும்...
யாரிடம் கேட்போம் யார் அவர்களின் நிலை கூறுவர் என்ற ஆதங்கம் அழுகையாய் மாறும் 
குருதியில் குளித்த ஒவ்வொரு உயிரும் உடலும் கண்முன்னே வந்து போகும்
மரண ஓலங்கள் காதில் மீண்டும் ஒலிக்கும்.......
இலை துளிர் மாதம் 
எமக்கு மட்டும் இலை உதிர் மாதமாய் மாறிப்போனதே...
எந்த மாற்றமுமின்றி ஒவ்வொரு வருடத்தை போல இந்த "மே"யும் கடந்து போகும்...
எம் வினாக்களுக்குவிடை இல்லாமலே ஏழாவது வருடமும் முடிந்து போகும் 
 கண்ணீருடன் மீண்டும் காத்திருப்போம் எம்மவர்களின் வருகைக்காய்....
இறுதி வரை....

- நிலா 
முள்ளிவாய்காலில் உயிர் தப்பியவர் 
0 Comments

முள்ளிவாய்க்கால் முடிவன்று!

5/9/2021

0 Comments

 
மே மாதமென்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை ஆறாவடுக்களைக் கனதியான நினைவுகளோடு கடக்கின்ற ஒரு மாதம். நவீன மானுட வரலாற்றில் மிகப்பெரும் இனவழிப்பை தமிழர்மீது நடத்தி மாபெரும் மனித அவலத்தை சிங்கள தேசம் அரங்கேற்றிய மாதம். முள்ளிவாய்க்காலில் இருந்தவர்களுக்கு மட்டுமன்றி உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களுக்கும் இதுவொரு ஆறாத காயத்தைப் பரிசளித்த மாதம்.
ஆக, இதுவொரு மிகப்பெரும் துயரை நினைவுகொள்ளும் மாதமாக அமைகின்றது. எமது போராட்டத்தின் விழுதுகள் வீழ்ந்துபோன களமாக இந்த முள்ளிவாய்க்காலை பலரும் பார்க்கிறார்கள். முள்ளிவாய்க்கால் என்பதை தோல்வியின்  குறியீடாகக் காட்ட எமது எதிரிகள் எத்தனிக்கிறார்கள். உலக வல்லரசுகளும் இந்தப் போக்கை உறுதிப்படுத்த விளைகிறார்கள். இனிமேல் விடுதலைப் போராட்டங்கள் முகிழ்ந்திடாமலிருக்கவும், நடைபெற்றுக் கொண்டிருக்கும்  போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யவும் முள்ளிவாய்க்காலை தோல்வியின் குறியீடாக நிலைநாட்டுவதற்குரிய எத்தனிப்புக்கள் நடைபெறுகின்றன.
ஓரினத்தின் எதிர்காலத்தைச் சூனியமாக்கிய நிகழ்வாக முள்ளிவாய்க்காலைப் பதிய வைக்கும் போக்கிற்குத் தமிழர்கள் பலியாகக் கூடாது. முள்ளிவாய்க்காலில் இருந்து தொடர்ந்து பயணிப்பதற்கான உத்திகளின் அடிப்படையிலேயே தமிழர்கள் பயணிக்க வேண்டும். முள்ளிவாய்க்காலைக் கருவியாகக் கொண்டு முன்னேற முயல வேண்டும்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி – ஒரு நம்பிக்கைக் குறியீடு
மே-18 அன்று முள்ளிவாய்க்கால் கஞ்சியைத் தமிழர்கள் பகிர்வதென்பது தற்போது பரந்தளவில் நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்க்காலில் எமது மக்களின் இறுதித் தஞ்சம் இந்தக் கஞ்சிதான், மக்களின் உயிர்நாடி இந்தக் கஞ்சிதான் என்ற அடிப்படையில் எமது மக்களின் பாடுகளை நினைவுகொள்ளும் விதத்தில் இந்தக் கஞ்சி வழங்கப்படுகிறது.
ஆனால் இதுவொரு நம்பிக்கையின் குறியீடு. மிகப்பெரும் அர்ப்பணிப்பினதும் தியாகத்தினதும் மக்கள்நலன் சார்ந்த அக்கறையினதும் வெளிப்பாடுதான் இந்தக் கஞ்சி. வெறுமனே அரிசியைக் கொதிக்கவைத்துக் கஞ்சி கொடுப்பது என்பதைத் தாண்டி, உயிரைப் பொருட்படுத்தாது, களைப்பைக் கவனிக்காது தன்னார்வமாகத் தொண்டாற்றும் அர்ப்பணிப்பு ஒருபுறம், என்னதான் பிரளயம் நடந்தாலும் கஞ்சி வழங்க வேண்டுமென்ற மக்கள் நலன்சார்ந்த கரிசனை ஒருபுறம் என்று இதன்பின்னால் மிகப்பெரும் வரலாறு பொதிந்துள்ளது.
நம்பிக்கையனைத்தும் பொய்த்துப் போய்விட்ட இறுதிநிலையிலும் கஞ்சி கொடுத்துக் கொண்டிருந்த நிர்வாக நடைமுறை உண்மையில் நம்பிக்கையின் குறியீடேதான். தப்பிப் பிழைத்தலுக்காக இறுதிமூச்சுவரை முயன்ற எம்மக்களின் வரலாற்றின் குறியீடு இந்தக் கஞ்சி.
ஆக, வெறுமனே முள்ளிவாய்க்கால் பாடுகளின் நினைவுக் குறியீடாக அன்றி, நம்பிக்கையின், மீளெளுச்சியின் குறியீடாக இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி அமையட்டும். தனியே முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் கஞ்சி வழங்குவதோடு சுருங்கி விடாமல் பரவலாக்கப்பட்ட விதத்தில் இந்தக் கஞ்சி பகிரப்பட்டு எம்மீதான இனவழிப்பைப் பன்னாட்டுமக்களிடம் பரப்புவதோடு நம்பிக்கையின் குறியீடாகவும் எமது தலைமுறைகளுக்குக் கடத்தப்படட்டும்.

- Vasanthan

0 Comments

முட்கம்பிக்குள் எம் மக்கள்!

5/8/2021

1 Comment

 
பதின்ம வயது சிறுமி ஒருத்தியின் பேச்சு ஒன்றை முகநூலில் பார்த்து கொண்டு இருந்தவன், அதன் கீழ் உள்ளீட்டத்தில்   முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் தப்பிவந்த சிறுமி இவள் என்று குறிப்பிட்டு இருந்ததையும் அவதானித்தவனின் நினைவுகள், இற்றைக்கு பதினொரு ஆண்டுகள் முன்பாக இழுத்து சென்றது. 

காலத்தின் பேரவலமாக வவுனியாவுக்கு அப்பாலுள்ள தமிழர்கள் அனைவரின் மனதிலும் காணொலி செய்திகளாக உலுக்கிக் கொண்டிருந்த காலப் பகுதியது. அனைவருமே கைவிட உலகம் பூராவும் அவலப்படும் மக்களை தனித்து நின்று போராடியவர்களாக இருந்தனர் தமிழ் மக்கள். அங்கே, எம் உறவுகள் உதிரம் சிந்தி மடிய, அதற்கு அப்பால் சில மைல்கள் தூரத்தில்  அச்சம், கவலை, வேதனை என எதுவித உணர்வுகளையும் வெளிப் படுத்த முடியாத இறுக்க சூழ் நிலையில் தம்மால் இயன்றதை செய்து கொண்டு இருந்தனர் எம் மக்களில் மறு பகுதியினர்.  

அன்றும் அலுவலக களப் பணிக்காக சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்தில் வேலைசெய்த அவனையும் சக பணியாளர்கள் சிலருடன் புதிதாக அவசர அவசரமாக செட்டிக்குளத்தில்  திறக்கப்பட்ட மெனிக் பார்ம் வலயம் நான்குக்கு  செல்லும் படி கேட்கப் பட்டிருந்தான். ஏற்கனவே பலமுறை மற்ற வலயங்களுக்கு சென்றிருந்தாலும் நான்காவது வலயத்துக்கு கொண்டு சென்று இறக்கப் பட்ட மக்களின் கோலத்தை அவலத்தை காணத் திறாணியற்றவனாக இருந்தான் என்றே சொல்ல வேண்டும். அப்படிப் பட்ட ஒரு அவல ஏதிலி நிலையில் அம் எம் மக்கள்.

முள்ளுக்கம்பி வேலிகளால் அடைக்கப்பட்டு சுட்டெரிக்கும் அந்த வெயிலிலும் நிழலுக்கு ஒதுங்க மரமேதுமே இல்லாத, அமைக்கப்பட்ட தரப்பால் கூரையாக கொண்ட அந்த ஒவ்வொரு முகாம்களிலும், ஏதிலிகளாக எதுவித உணர்ச்சியுமற்று ஒட்டிய வயிறும் மாற்ற உடுதுணிகளுமின்றி வரண்டிருந்த அவர்கள் முகங்கள், அந்த தரப்பால் கொடுத்த சூட்டை உணரும் சக்தி யற்றிருந்தனர். யத்த களத்தில் கஞ்சி கொடுத்த தஞ்சத்தில் உயிரைக் காப்பாற்ற தம் வயதான தாய் தந்தையர் குழந்தைகள் கைக்குழந்தைகள் சகோதரர்கள் என எவர்கள் மயிரிழைகளில் தப்பி, பதுங்கி, ஓடி, திக்கு திசை மாறி, நித்திரைகளுமின்றி இருந்தவர்கள், துப்பாக்கி சன்னங்கள் ஓய்ந்து, குண்டு மழை நின்று கிடைக்கும் கள ஓய்வுகளை பயன் படுத்தி காயமடைந்தவர்களை இயலுமானவரை தூக்கி கொண்டோ, இழுத்து கொண்டோ காலில் தட்டுப் படும் உடலங்களை கடந்து, நில நீர் நிலைகள் பல கடந்து, தம்மோடு தம்மால் இயன்றவர்களை காப்பாற்றி கடைசியாக இந்த செட்டிகுளம் மெனிக் ஃபார்ம் வலயங்களில் தஞ்சமடைந்திருந்தனர்.

வாகனத்தில் இறங்கி உடல் பரிசோதனை முடித்து கொண்டு வந்த அலைபேசியை சோதனையில் ஒப்படைத்து சென்றவன், சிறுவர்கள் இருந்த முகாம்களில் விபரக்குறிப்பு எடுத்து கொண்டு இருந்தான். அழகான ஒரு சிறு குழந்தை தனியே தத்தி தத்தி நடந்து கொண்டிருந்தது. தாய் தந்தை ஒருவரும் கூட இல்லை.  வயதான பாட்டி ஒருவர் மட்டுமே கூட இருந்தார். விபரம் கேட்க முடியாத இறுக்க நிலை அவனுக்கு விளங்கியது. பாட்டியாலும் எதுவும் சொல்ல இயலவில்லை என்பதை அவர் தன் உணர்ச்சிகளை எவ்வளவு அடக்கியும் கசியும் கண்ணீர் துளிகள், அவனுக்கு நிலமையை விளக்கியது. சூழலை இயல் பாக்க, அக்குழந்தையுடன் விளையாட்டு காட்டி சிரிக்க வைத்து பாட்டியுடன் இயல்பாக கதைத்து தேவைகள் மட்டும் குறிப்பெடுத்து, அக் குழந்தையின் சிரிப்பில் பிரிய மனம் இன்றி, அடுத்த கூடாரம் நோக்கி சென்றவன் மனது இன்னமும் அக்குழந்தை  பற்றியே இருந்தது.
​
- அனன் -
1 Comment

செங்குருதிக் கஞ்சி!

5/8/2021

0 Comments

 
உண்டி நிறப்பக் கஞ்சிக்கு ஓடோடி
சந்தி சந்தியாய் கால் கடுக்க நிற்க
வண்டு வந்து வட்டமிட
கொத்துக் கொத்தாய்
குண்டை இறக்க
செங்குருதி மண்ணை நனைக்க
சதைகள் மரக்கிளையில் தொங்க
எட்டுத் திசையும் தலை தெறிக்க ஓட
இருந்த இடம் தெரியாது முழி பிதுங்க
சொந்தங்கள் எங்கே
என மனம் பதைக்க
செல்வதறியாமல் பாதை மறக்க
எஞ்சியவர்கள் செங்குருதிக் 
கஞ்சி குடித்த நினைவுகளை
மறப்போமா?

- அத்மிகா

0 Comments

என்றும் தணிந்திடாது எங்களின் உறுதி!

5/6/2021

0 Comments

 
மரண ஓலம் மனதைக் கிழிக்க
மனித உடல்கள் சிதறிக் கிடக்க
மனிதம் வெட்கி மௌனித்து மரணித்து போன நாளை மறக்க முடியுமா? 

மானிட வரலாற்றில் எங்கும் கண்டறியா செங்குருதியாறு
மண்ணில் பெருக்கெடுத்தோட
இருப்பிழந்த இனமொன்றின் இகத்தின் மீது
உலகமே சேர்ந்து நெருப்புமிழ்ந்த நாளை மறக்க முடியுமா? 

மனித உரிமைகள் தமிழருக்கில்லை
தமிழர்களெல்லாம் மனிதர்களில்லை
தமிழர்களெல்லாம் மனித ஜாதிகளில்லை மிருக ஜாதிகளென்று
உலக வல்லரசுகளால் உணர்த்தப்பட்ட நாளை மறக்க முடியுமா?

கொட்டும் எறிகணை மழையிலும்
கொத்துக் குண்டு வீச்சிலும்
கொதிக்கும் இரசாயன குண்டுப் பொழிவிலும்
உச்ச துன்பங்களை அணைத்தபடி
உறங்கும் எலும்புக் கூடுகளைக் கடந்தபடி
உணர்வுகளெல்லாம் மரத்தபடி
உயிரைக் கையில் பிடித்தபடி
ஒற்றை வரிசையில் நின்றபடி
ஒரு குவளைக் கஞ்சிக்காய்
உன்னத உயிரினை இழந்த
உறவுகளை இழந்த நாளை மறக்க முடியுமா? 

இத்தனையும் இன்று மறந்து நாம் இருக்க முடியுமா
எம் உள்ளம் தான் அதற்கு இடம் கொடுக்குமா
மறந்து போவதற்கு அதுவொன்றும் கனவல்ல
பல நூறு ஆண்டு கழிந்தாலும்
அணையா நெருப்பாக எரிந்து கொண்டிருக்கும் ஒரு இனத்தின் வலி
அன்று தெறித்தது எங்களின் குருதி
என்றும் தணிந்திடாது எங்களின் உறுதி.

-சுடர்விழி -
 முள்ளிவாய்க்காலில் உயிர்தப்பியவர்
0 Comments

Never give up!

5/6/2021

0 Comments

 
​The death knell to tear the mind
Scattered human bodies
My stomach is black
dreadful sounds
In the pouring projectile rain
And cluster munitions
And in the boiling chemical bombardment
As the supreme suffering is extinguished
As the sleeping skeletons pass
Feelings are wooden
holding life in hand
To stand in a single row
For a pot  of congee
Can you forget the day you lost families?
Can we forget all this today?
Will my heart just make room for it?
It is not a dream to be forgotten
Although several hundred years later
The pain of a race that is burning like fire
Our blood splattered on
Our commitment to never give up.

-Sudar -
A Mullivaikkal Survivor
0 Comments

நம்பிக்கை விதைப்போம் ….

5/5/2021

0 Comments

 
நஞ்சுக் குண்டுகள் வீசப்பட்ட
நரகத்திலிருந்து
அஞ்சி நின்ற எஞ்சிய
உயிர்களுக்கெல்லாம் 
நம்பிக்கையானது சிரட்டைக்குள் 
கஞ்சி!
நம்பிக்கை விதைப்போம் ….

- வான்மதி -


0 Comments

Life

5/5/2021

0 Comments

 
Picture
I slit my wrist
“Your life isn’t yours to take” the world said
She took poison
“It only get better from here” the world said
He tied a noose 
“You’re a fighter, you can get through this” the world said
Me him and her lay quivering in bunkers holding on to our life that was supposedly to be the priceless possession of ours...only to meet with silence and screams. 
No one spoke about the value of life, 
No one promised a better tomorrow
And to think now, no one really wanted us to fight and get through...
cuz it’s easier to bury everyone than to answer anyone 
After all, our lives were never ours.

​- Maathavi -
Mullivaikkal Survivor
0 Comments

கஞ்சிக்கொட்டில் - கதிர்

5/1/2021

0 Comments

 
​குழந்தைகளின் அழுகுரல்கள் கேட்க
உறவுகளின் கண்ணீர் சொந்த மண்ணில்
ஆறாய் ஓடியது – அதோ
கேட்கிறதா வெடிகுண்டுகளின் சத்தம்

ஒவ்வொரு குண்டுத் தாக்குதலுக்கு பின்னும்
வானைப்பிளைக்கும் மக்களின் ஓலங்கள் – அங்கே
கந்தகம் காற்றில் கலந்தது – மண்ணில்
அப்பாவி மக்களின் குருதியும் கலந்தது

திசையெட்டும் பரவிக்கிடந்த - மனித 
சிதலங்களும் புதைகுழிகளும் வெடிகுண்டுப் பாகங்களும்
நீர் நிலைகளும் மாசுபட்டது – எமது
உணவுப்பொருட்களும் மண்ணோடு மண்ணானது.

பசி ஒரு பக்கம் தொலைந்த எம் உறவுகளின்
நீங்கா நினைவுகள் ஒரு பக்கம்
உணவுக்கோ பஞ்சம் எம் மக்களுக்கு – வறண்ட
தொண்டைக்கோ கறை படிந்த உப்பு தண்ணீர்

அதோ அங்கே கஞ்சிக்கொட்டில்
தளர்ந்த மனக்களுக்கும் மெலிந்த உடலுக்கும்
ஒருவேளை கஞ்சி மட்டுமே நம்பிக்கை
முள்ளிவாய்க்கால் கஞ்சி மட்டுமே நம்பிக்கை! 
​- கதிர்-
0 Comments

    Author

    This section is dedicated to stories and other forms of expression from people who survived Mullivaikkal.

    Archives

    May 2021
    April 2021

    Categories

    All

    RSS Feed

Picture

Who We Are? 

We are survivors of Mullivaikkal.  We are here today because people  sacrificed their lives to save others, to feed others, to protect others. Everyone who was killed, injured or affected in any way are our "HEROES".  It is our duty to share the stories. 

    Sign Up to The Mailing List

Subscribe to Newsletter

Connect With Us! @CONGEEOFHOPE

Proudly powered by Weebly